அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களை விரட்டவா புதிய புத்த கோயில்கள்???

Share
20220317 103002 scaled
Share

தமிழர்களை விரட்டவா புதிய புத்த கோயில்கள்???

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள் என்று கேள்வி எழுப்பிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான முயற்சியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக வலியுறுத்தப்பட்டதுமான எமது தாயகபூமியான வடக்கு-கிழக்கிலிருந்தும் அரசின் நடவடிக்கையினூடாக நாம் விரட்டியடிக்கப்பட்டால் நாம் எங்கே செல்வது? எனவும் அவர் வினவினார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இப்பொழுது வடக்கு-கிழக்கைக் குறிவைத்து அங்குள்ள புராதன சைவ ஆலயங்களை உடைத்து, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தான்தோன்றித்தனமான முறையில், தனிநபர்களின் காணிகளையும் கபளீகரம் செய்து, அவற்றில் புத்தகோயில்களைக் கட்டுவது மாத்திரமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் காணிகளையும் சுவீகரித்து அதற்கு இராணுவ பாதுகாப்பையும் வழங்கி தொடர்ச்சியாக சிங்கள குடியேற்றங்களையும் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு யுத்தத்திற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களை வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குடியேற்றி வருகின்றார்கள்.

கிழக்கில் ஏற்கனவே முக்கியமான பகுதிகளில் மிகப்பாரியளவிலான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுது வடக்கு மாகாணத்தில் மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகையில் 25 சதவீதம் சிங்கள மக்களாக இருக்க வேண்டும் என அரச இராணுவ உயர் மட்டங்கள் முடிவெடுத்துச் செயற்படுகின்றன.

இதன் வெளிப்பாடாகவே வடக்கு-கிழக்கில் 1,000 புத்தவிகாரைகளைக் கட்டுவதற்கு 2018ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் கோடிக்கணக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம் வடக்கின் குடிசனப் பரம்பலை மாற்றி அவர்களது பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து வடக்கையும் ஒரு கலவர பூமியாக மாற்றி தமிழ் மக்களை அங்கிருந்தும் விரட்டுவதே மாறிமாறி ஆட்சிக்கட்டிலில் ஏறும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கின்றது.

ஏற்கனவே யுத்தத்தின் காரணமாக ஏறத்தாழ 1.5 மில்லியன் மக்கள் அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள்.

இலங்கை அன்னிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்பதற்காக தமிழ் மக்களும் இன மத பேதமின்றி போராட்டக்களத்தில் முன்னின்று போராடினார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் தனிநாட்டிற்காகவோ அல்லது சுயாட்சிக்காகவோ போராடவில்லை.

இலங்கையின் தென்பகுதியில் இனமோதல்களை உருவாக்கி, தமிழர்களுக்கு அவர்களது தாயகப் பிரதேசமான வடக்கு-கிழக்குதான் பாதுகாப்பான பிரதேசம் என்ற அடிப்படையில் அவர்களை வடக்கு-கிழக்குப் பிரதேசத்திற்கு விரட்டியடித்ததுடன் அரசே கப்பல்கள் மூலம் தமிழ் மக்களை அப்பிரதேசங்களுக்கு அனுப்பியும் வைத்தது. இவ்வாறான நடவடிக்கைகள் அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசின் இவ்வாறான விடயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கண்டிக்காமல் இருப்பதும் இலங்கை அரசின் தமிழர் விரோத செயற்பாட்டிற்கு உலகநாடுகளும் ஐ.நா. சபையும் துணைபோகின்றதா என்ற அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இப்பொழுது, வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, மிகப்பெருமளவிலான வேகமான சிங்கள பௌத்த மயமாக்கல் என்பது ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவம் அவர்களின் இருப்பு காப்பாற்றாப்படவேண்டுமாக இருந்தால், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அரசு தனது சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனைகளைக் கைவிட்டு சகல இனங்களும் இந்த மண்ணில் தமது சொந்தப் பிரதேசங்களில் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விடயங்களில் தனது தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...