19 18
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த ராஜித

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த ராஜித

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்காவிடின் அதன் தரவுகள் பொய் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, அதன் சூத்திரதாரிகளைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவதாக ஜனாதிபதி தலைமையிலான அரசு தெரிவித்திருந்தது. அநுரகுமார மீது நம்பிக்கை வைத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் மறைமுகமாக அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்து வந்தார்.

ஆனால், உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் அல்விஸ் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கையில் 17 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால், இந்த 17 பேரில் ஒருவர்தான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் சிரேஷ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன. இவர்தான் தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு, தெளிவான தகவல் அனுப்பி இருந்தபோதும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறி இருந்தார்.

ஆனால், அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்ததுடன் பொது மக்கள் பாதுகப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவை நியமித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் பாெறுப்பையும் அவருக்கே வழங்கியுள்ளார்.

இவ்வாறான நபரிடமிருந்து உண்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா எனக் கேட்கின்றோம். அதேநேரம் அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் வழங்கிய நியமனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த நபர்களின் பின்னணி தொடர்பில் தேடிப்பார்க்காமலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அனுபவம் இல்லாமையே இதற்குக் காரணமாகும். அத்துடன் உதய கம்மன்பிலவினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.

ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவிக்குமானால் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் அவ்வாறு தெரிவித்தால், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கப் போகின்றது?

இந்த அரசும் புதிய விசாரணை ஒன்றை ஆரம்பித்து அதனை 5 வருடங்களுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் நிலைதான் ஏற்படும். அதேநேரம் வெளியிடப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.

எனவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி காலத்தைக் கடத்தாமல் விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாக்கொண்டு, இந்தத் தாக்குதலின் பின்னணியைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...

Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...