நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
கைதிகளின் இரு குழுக்களிடையே போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமான தாக்குத்தல்கள் நடத்தப்பட்டமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
மோதல் சம்பவத்தின் பின்னர், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் வகையில் கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 600 கைதிகளும் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ,உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு ,உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக, தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார்.