முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குறித்த பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் இந்த தகவல்கள் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல்போன சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரில் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருப்பினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே நடைபெற்றுள்ளன.
இதன் மூலம், கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் காரணமாகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது? என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.