ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்காக, தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த, தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை. இருப்பினும், அண்மைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வரும் பாகிஸ்தான் தாலிபான் (TTP) மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.
அண்மைய காலங்களில், பாக்கிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் 2021 இல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஆப்கான் தாலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான TTP அமைப்புதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
TTP தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், காபூல் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.