“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுத்துள்ளது.
மேற்படி வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த, நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளினை எதிர்கொள்ளும்.
இந்த சட்டமூலமானது, மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இலக்கு வைத்துள்ளது.
குறித்த சட்டமூலமானது, அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தான் வாக்கெடுப்பு நடைபெறும்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை வரவேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.