தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசம் எங்கும் பரந்து வாழும் உலகத் தமிழர்கள் அனைவரதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துபோன திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள்.
உலகமே பிரமித்துபோகும் பிரமாண்டத்தோடு, தமிழின விடுதலை ஒன்றையே மூச்சாகவும், வீச்சாகவும் கொண்டு, 30 ஆண்டுகாலமாக நடைபெற்று முடிந்த மக்களுக்கான போராட்டத்திற்காக தம்மையே தாரைவார்த்த எம் தேச வீரர்களை பயங்கரவாதிகள் என்று பறைசாற்றுவது எத்தனை அபத்தமானது?
போரின் விளைவால் அரச படைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்த எம் மக்களுக்கு
ஆறுதலாக அமைவது இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை ஒன்றே.
இந்த அடிப்படை உரிமையைக்கூட, பறிக்க முனையும் இலங்கை அரசின் செயற்பாடுகள், எமது மக்களின் இருப்பை மேலும் மேலும் கேள்விக்குட்படுத்துவனவாகவே காணப்படுகின்றன.
நினைவேந்தல்களைத் தடுப்பது, நினைவேந்தலில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவது, கைது செய்வது போன்ற அரசின் நடவடிக்கைகள் எமது மாவீரர்களின் உயிர்த் தியாகங்களையும், அவர்களின் புனிதத்தன்மையையும் மலினப்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.
தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து, தர்மத்தின் வழி நின்று, இன விடுதலை என்ற சத்திய லட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, தமிழினத்தின் எழுச்சிக்கு மூச்சாகி நின்ற எம் மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலிகள் – என்றார்.
#SriLankaNews
Leave a comment