பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் மிகப்பெரும் கண்டனப் போராட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது, வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களதும் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில், நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளரும் வைத்திய கலாநிதியுமான கதிரமலை உமாசுதன் தெரிவிக்கையில்,
தற்போது உள்ள மோசமான திட்டமிடப்படாத ஊழல் நிறைந்த, மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் மக்களது அடிப்படை உரிமைகளான சுகாதாரம், இலவசக் கல்வி மற்றும் அவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்வதற்கு உரிய வசதிகளை வழங்காத இந்த அரசாங்கத்தையும், அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் எதிர்த்து தற்பொழுது மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
தற்பொழுது இலங்கை முழுவதிலும் பல்வேறு வடிவங்களில், மக்களது இயலாமையின் வெளிப்பாடாக, அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் அவர்களை நடு வீதிக்கு போராட தள்ளப்பட்டிருக்கும் அவர்களைப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு எதிராக மக்களது போராட்டம் வலுவடைந்துள்ளது.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டங்களுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்துள்ளது.
அந்த வகையில் தற்பொழுது உள்ள பாழடைந்த – முரண்பாடான அரசியல் அமைப்பிற்கு எதிராக சமூக, பொருளாதார, சுகாதார அரசியல் நெருக்கடி மற்றும் அதற்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிதி ஒழுக்கத்தால் ஏற்பட்டுள்ள மந்த நிலை, அந்நிய செலாவணி நெருக்கடி, உயர் பணவீக்கம், சுகாதார நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி என்பவற்றுக்கு எதிராக நாளை 9-5-2022 திங்கட்கிழமை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் மாபெரும் அணியாக திரண்டு இந்த ஊழல் அரசாங்கத்திற்கு எதிரான தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு நாளை யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் அணி திரண்டு தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளனர்.
அந்தவகையில் யாழ் மாவட்டம் உட்பட வட மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலுமிருந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதானிகள் மற்றும் அனைத்து வைத்தியர்களும் இணைந்து இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
தற்போது உள்ள பாழடைந்த – முரண்பாடான – அரசியல் அமைப்புக்கு பதிலாக மக்களுக்கும் நாட்டுக்கும் பொறுப்பு கூறக்கூடிய ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் மற்றும் பொறுப்பு கூறும் ஆட்சிமுறையை ஏற்படுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment