301729012 5373403356041829 5402546251139281001 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிகாரத்தை’ கையிலெடுத்தார் மைத்திரி

Share

கட்சித் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனினும், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர உட்பட சில உறுப்பினர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கட்சித் தலைவரை ‘சர்வாதிகாரி’ ஆக்கும் வகையிலும், ஜனநாயகத்தை சவாலுக்குட்படுத்தும் விதத்திலுமே யாப்பு திருத்தப்பட்டுள்ளது என்று நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டை மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

“ கட்சிக்குள் ஒழுக்கத்தை பேணவும், கட்சியை பலப்படுத்தவுமே யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஐந்து ஜனாதிபதி சட்டத்தரணிகளை கொண்ட குழு ஊடாகவே யாப்பு திருத்தப்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்படமாட்டாது.” ” – என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, கருத்தாடல்கள் இடம்பெற்றன.

கட்சியின் யாப்பு மற்றும் ஒழுக்க விழுமியங்களைமீறும் உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர்தவிர ஏனையோரை நீக்கும் அதிகாரம் இதன்மூலம் தலைவருக்கும், மத்திய குழுவுக்கும் கிடைக்கின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த திருத்தத்துக்கு நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் சாடியுள்ளனர்.

அத்துடன், சிரேஷ்ட உப தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சில திருத்தங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றக்குழுவில் பெரும்பலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மத்திய குழுவில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

72 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சு.க.!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் இன்று 72 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

தேசிய மட்டத்தில் உதயமான பிரதான அரசியல் கூட்டணிகளுக்கு தலைமைத்துவம் வழங்கி ‘தலைமை’க் கட்சியாக வலம்வந்த சுதந்திரக்கட்சி இன்று தனித்துவத்தை இழந்த நிலையிலேயே 71 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.

கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகம பகுதியில் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொள்கைரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க உருவாக்கினார். அவரின் பின்னால் மேலும் பலர் அணிதிரண்டனர்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்கள மொழி, தேசிய பொருளாதாரம் உட்பட தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்ததால் மக்கள் மத்தியில் குறுகிய காலப்பகுதிக்குள் ஆதரவலை உருவாகியது.

1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு வளர்ச்சி கண்டது.

அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார். 1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பண்டாரநாயக்க (60 வயது) சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட பின்னர் தற்காலிக தலைவராக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த சி.பி.டி. சில்வா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஶ்ரீமாவிடம் கையளிக்கப்பட்டது. அவரும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.

1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 1982 ஆம் ஆண்டே முதலாவது தேர்தல் நடைபெற்றது.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் சுதந்திரக்கட்சியின் சார்பில் கை சின்னத்தில் கொப்பேகடுவவே போட்டியிட்டார்.1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் களமிறங்கியது.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார்.

89 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கை சின்னத்திலேயே சு.க. போட்டியிட்டது.1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டது. பிரதம வேட்பாளராக சந்திரிக்கா களம்கண்டார்.
இறுதியில் ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு.கவின் தலைவர் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே கதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

2004 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதால் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது.

அதன்பிறகு 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கியது. சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ சின்னங்களின்கீழும் சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொண்டிருந்தாலும் – கூட்டணியின் தலைமைப் பதவி , ஜனாதிபதி வேட்பாளர் ஆகியவற்றை பங்காளிகளுக்கு விட்டுக்கொடுத்தில்லை.

எனினும், 37 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மேற்படி இரு விடயங்களையும் விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தாது, கூட்டணி என்ற போர்வையில் ‘மொட்டி’டம் சரணடைந்து சுதந்திரக்கட்சி.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மூன்று மாவட்டங்களில் அக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ். மாவட்டத்தில் மாத்திரமே ஒரு ஆசனம் கிடைத்தது. களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய வேட்பாளர்கள் மொட்டு கட்சியின் பட்டியலின்கீழ்தான் போட்டியிட்டனர்.

பண்டாரநாயக்க, ஶ்ரீமா, சந்திரிக்கா, மஹிந்த போன்றவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் வளர்ச்சி கண்ட சுதந்திரக்கட்சி, மைத்திரியின் தலைமையின்கீழ்தான் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...