பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட வான்வழி சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த, பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், சோதனைகள் நேற்று இடம்பெற்றன.
சோதனை நடவடிக்கைகளின்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் (Metal containers) மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.