நேற்று யாழில், புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ள தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த சமயத்தில் பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர்.
அவ்வாறு உயிரிழந்தவர், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதான முருகேசு ரமேஷ் ஆவார்.
குறித்த பேருந்தானது வேலணை – அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமடைந்துள்ளார்.
சாரதியின் மயக்க நிலையுடனேயே பேருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமடைந்த விடயம் தெரியவந்துள்ளது.
அச்சந்தர்ப்பத்தில், சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதுடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.