இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கு போர் நிலமை காரணமாக சில நாடுகளின் வான்பரப்பு குறுகிய அறிவித்தலில் மூடப்படலாம். அல்லது சில நேரம் விமான நிறுவனங்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தல், வேறு பாதைகளைப் பயன்படுத்த அல்லது விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாமென்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Smartraveller இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலை குறிப்பாக டுபாய், டோஹா, அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கு விமான நிலையங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்ட வான்பரப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் விமானங்கள் தாமதமடைதல், பயண வழிகள் நீளுதல் மற்றும் இணைப்பு விமானங்களைத் தவறவிடும் அபாயம் காணப்படுகின்றது.
எனினும், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் தற்போது முற்றிலுமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும், கட்டார் எயார்வேஸ் நிறுவனம் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவனையை பராமரித்து வருகிறது.
அத்துடன், குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானச் சேவைகளும் பாதுகாப்பு நிலைமை காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, இலங்கைக்குப் பயணம் செய்ய அல்லது இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானப் பயணத்தின் நிலைமையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.