வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டுள்ளது.
குறித்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.
இதனை கண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் மற்றைய பணியாளர்களும் அவர்களை மீட்க உதவியுள்ளனர். கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் இணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டன.
2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், படகில் பயணித்த 32 பேரின் பெயர் பட்டியலையும், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்த பலரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
முதல்கட்ட விசாரணையில், அந்த வேகப் படகானது அசாதாரணமான அலைகளையும் காற்றையும் எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருவதோடு, முதல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் வகையிலான இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. 84362817930, 84915523714 மற்றும் 84334520414, 84913089165 .