உலகம்
மருத்துவர்களுடன் காசாவை நோக்கி புறப்பட்ட கடற்படை கப்பல்: பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பிய நாடு உதவிக்கரம்
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை கூண்டோடு அழிக்க இஸ்ரேல் காசாவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
இஸ்ரேலிய இராணுவப் படைக்கும், ஹமாஸ் வீரர்களுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.
ஆனால் இந்த போர் நடவடிக்கையால் போதுமான மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் அப்பகுதி மக்கள் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகள் உதவி தொகுப்புகளை அனுப்ப தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையுடன் கூடிய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளதாக புதன்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் குரோசெட்டோ, இத்தாலிய துறைமுகத்தில் இருந்து வல்கானோ என அழைக்கப்படும் கடற்படை கப்பல் 170 ஊழியர்களுடன் காசாவை நோக்கி புறப்படுகிறது.
அதில் அவசர மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள கூடிய பயிற்சி பெற்ற 30 பேர் உள்ளனர் என தெரிவித்தார்.