வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!!
குஜராத் அமைச்சர் ஒருவர் பழங்குடியின விழாவில் கொடுத்த மதுபானத்தை தவறுதலாக குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள டெடியாபடா தாலுகாவில் உலக பழங்குடி தினத்தை முன்னிட்டு பழங்குடியினர் சிறப்பு விழாவை நடத்தினர்.
இந்த விழாவானது பூமித்தாயை வணங்குவதற்காக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் குஜராத் வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், பாஜக எம்எல்ஏ மோதிலால் வாசவா, நர்மதா மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சங்கர் வாசவா மற்றும் சில கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பழங்குடியின சாமியார் சாவ்தூ வசவ காட்டு இலைகள், நெற் பயிர்கள், தேங்காய், பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் மதுபானம் ஆகியயவற்றை வழங்கினார்.
இதில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இலையால் செய்யப்பட்ட பச்சை நிற கோப்பையில் மதுபானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுபானத்தை தரையில் ஊற்றினர்.
ஆனால், அமைச்சர் ராகவ்ஜி பட்டேல் மதுபானத்தை தவறுதலாக குடித்தார். உடனே, மோதிலால் மற்றும் சங்கர் இருவரும் அமைச்சரிடம் குடிக்க கூடாது என்று கூறினர்.
பின்பு, இலையினால் செய்யப்பட்ட கோப்பையை கீழே போட்டுவிட்டு இதனை நீங்கள் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
அப்போது, மற்ற அனைவரும் அமைச்சரின் செயலை பார்த்து சிரித்தனர், தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
வீடியோ வைரலானதையடுத்து அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், “பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது எனது முதல் வருகை. எங்கள் சடங்குகளில் எங்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் போது, நாங்கள் அதை பருகுவோம். அது போல தான் இத்தனையும் நினைத்தேன் ” என்று கூறினார்.
Leave a comment