Connect with us

இலங்கை

ருமேனிய எல்லையில் 37 இலங்கையர்கள் கைது!

Published

on

Arrest Reuters 1548877115

பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்றின் உள்ளே ஒளிந்திருந்து எல்லை தாண்டி ஹங்கேரி நாட்டினுள் நுழைய முயன்ற 37 இலங்கையர்களை ருமேனிய பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ருமேனியா-ஹங்கேரி இடையிலான நாட்லாக் – 2 (Nadlac II Border)) எல்லையில் இவர்கள் பிடிபட்டனர் என்று ருமேனிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ருமேனிய நாட்டவர் ஒருவர் தான் செலுத்தி வந்த ட்ரக் வாகனத்தைச் சோதனைக்காக எல்லை நுழைவிடத்தில் நிறுத்திவிட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சமயம் ருமேனியாவில் இருந்து இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தின் உள்ளே மனிதர்கள் மறைந்திருப்பதை எல்லைக் காவல் படையின் மோப்ப நாய்கள் கண்டு பிடித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து வாகனத்தைச் சோதனையிட்ட காவலர்கள் உள்ளே இருந்து 37 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர். ஹங்கேரி வழியாக ஷெங்கன் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காகஇவர்கள் அவ்வாறு வாகனத்தின் உள்ளே ஒளிந்திருந்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் வேறு இரண்டு வாகனங்களில் இதே போன்று ஒளிந்து பயணித்த ஆசிய நாட்டவர்கள் உட்பட பல புகலிடக் கோரிக்கையாளர்களைருமேனிய எல்லைக் காவலர்கள் கண்டு பிடித்துக் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்களுடன் சேர்த்து மொத்தம் 70 பேர் எல்லையில் பிடிபட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள் ஆவர். பங்களாதேஷ் நாட்டவர்கள் ருமேனியாவில் தொழில் புரிவதற்காக விசேட தொழில் வீஸா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த வீஸாவுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய ஷெங்கன் எல்லைக்குள் சட்டபூர்வமாகப் பிரவேசிக்க முடியாது.

தொழிலுக்காக என்று வீஸா பெற்று ருமேனியா வருகின்ற பலர் அங்கிருந்து சட்டவிரோதமான பயண வழிகள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அவர்களில் இலங்கையர்கள், துருக்கியர் எதியோப்பியர்கள், மற்றும் சிரிய நாட்டவர் ஆகியோரும்
அடங்குவர்.

Advertisement

#world

Advertisement