செய்திகள்
எதுவும் நிரந்தரம் இல்லை! – கங்குலி பதவி தொடர்பில் ரவிசாஸ்திரி
இந்திய அணியின் முன்னாள் கப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது.
கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார்.
ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர். நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.
கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது.
புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
#sports
You must be logged in to post a comment Login