” எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நாடு முழுவதிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இன்று புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சுபநேரத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எமது அரசு, இந்த நாட்டை பொறுப்பேற்றது. பல சிரமங்கள் இருந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. இன்றும் அதே வேகத்தில் செயற்படுகின்றோம். எனவே, அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியளிக்க மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
கொரோனா வைரஸால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எமது நாட்டில் மட்டுமல்ல உலகளவில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அவர் மலையகத்துக்கு கொண்டுவந்தார். தற்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார். எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் நாடு விரைவில் மீளும் என நம்புகின்றோம்.
அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கட்டும், பொதுத் தேர்தலாக இருக்கட்டும், மாகாணசபைத் தேர்தலாக இருக்கட்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தலாக இருக்கட்டும். சவாலை எதிர்கொள்ள நாம் தயார்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment