பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு
பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான பிரித்தானியா அரசின் தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும். இவ்வாறு பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரத்தியேகமாக தமக்கு அறிவித்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரித்தானியாவில், பயங்கரவாதத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மீளப்பெறுமாறு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பிரித்தானிய அரசு, இந்த தடை தொடர்ச்சியாக அமுலாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் உட்பட அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து போன்றவற்றை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் – என தெரிவித்துள்ளது.
இதேவேளை. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு தொடர்பில் இதுவரை பிரித்தானியா அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment