மஹிந்த சுமந்திரன்
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் சுமந்திரன் நேரில் கூறியது என்ன?

Share

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாகக் காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச் செய்து, அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு இப்போதே – உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும்.

அப்படிச் செய்வது ஒன்றே இப்போதைய அரசியல் நெருக்கடிகளைச் சுமுகமாகத் தீர்த்து நாடு மீண்டெழுவதற்கு ஒரே வாய்ப்பாகும்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரடியாகச் சந்தித்து அவருக்கு ஆலோசனை வழங்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பின் அழைப்புக்கிணங்க நேற்றிரவு 7.30 மணி முதல் 8 30 மணி வரை அவரது அலரிமாளிகை இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார் சுமந்திரன் எம்.பி.

உதவியாளர்கள் எவருமின்றி நேரடியாக இருவருமே மனம் விட்டுப் பேசினர்.

பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் ஊடாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்கு என்ன செய்யலாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுமந்திரன் எம்.பியிடம் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இப்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் எல்லோருடனும் தான் உரையாடி வருகின்றமையை சுமந்திரன் எம்.பி., பிரதமருக்குச் சுட்டிக்காட்டினார்.

நேற்றுக் காலையில்கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயங்கள் குறித்துத் தொலைபேசியில் நீண்டநேரம் தம்மோடு கலந்துரையாடினார் என்பதைத் தெரியப்படுத்தினார் சுமந்திரன் எம்.பி.

அதேபோல் அனுரபிரியதர்ன யாப்பா உட்பட்ட சுயாதீன அணியினர் தம்மோடு பேச்சு நடத்தி இருப்பதையும், ஜே.வி.பி. மற்றும் வாசுதேவ தரப்பினரும் தம்மோடு உரையாடி வருகின்றமையும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகளோடு தான் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி., இன்றைய நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்கும் நடவடிக்கையை அரசு தரப்பு தானே முன்வந்து முன்னெடுப்பதாக அறிவித்து, அதனை மேற்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே குறிப்பிட்டு இருக்கின்றார் என்று சொன்னார். எனினும், அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். மக்கள் அவருக்குக் கொடுத்த ஆணையின் முடிவில்தானே அதைச் செய்ய முடியும் என்றார் பிரதமர்.

அதைச் சுமந்திரன் எம்.பி. மறுத்துரைத்தார். மக்கள் ஆணைதான் இப்போது பிரச்சினையாகியுள்ளது; சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. அதை வழங்கிய மக்கள் அதைத் திரும்பப் பெற்று விட்டோம் என்பதைத் தெரியப்படுத்தவே வீதிக்கு இறங்கியுள்ளனர்.

ஆகவே, மக்கள் ஆணை என்ற வாதம் சரிப்பட்டு வராது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒரு நாளில் ஒழித்துவிட முடியாது என்பது உண்மைதான். அதற்கு சில மாதங்கள் தேவைப்படலாம். குறிப்பிட்ட மாதக்கணக்கில் அதைச் செய்வோம் என்று ஆளும் தரப்பு அறிவிக்க வேண்டும், அதன்முடிவில் பொதுத் தேர்தலை நடத்தி, அதிகாரத்தை யார் பயன்படுத்துவது என்பதை மக்கள் ஆணை மூலம் அறிந்துகொள்ளலாம்.

அதனை மக்களுக்கு அரசு இப்போது பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். குறுகிய காலத்தில் இவற்றைச் செய்வதாகப் பிரகடனப்படுத்தி, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து அதை முன்னெடுக்க அரசு முன்வந்தால்தான் இப்போதைய நெருக்கடி தீரும். பிரச்சினை தணியும் சூழலும் ஏற்படும். ஜனாதிபதிக்கும் கெளரவமாக – நாட்டைப் பீடித்த தவறான ஆட்சி முறைமைக்கு முடிவு கட்டியவர் என்ற பெயரோடு – பதவியில் இருந்து இறங்க வாய்ப்புக் கிட்டும் என்றார் சுமந்திரன் எம்.பி.

இந்த விடயங்கள் குறித்துத் தாம் ஜனாதிபதியோடு கலந்துரையாடி ஒரு முடிவை எடுப்பார் என்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழர் தரப்போடு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசு நடத்திய பேச்சுக்கள் குறித்தும் சுமந்திரன் எம்.பி. பிரதமரிடம் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் முரண்பாடு இருக்கத்தக்கதாக நாங்கள் உங்களோடு பேச வந்தோம். அந்தப் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவுகளையாவது – நீங்கள் இணங்கிய விவகாரங்களையாவது உடனடியாக நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் என்று சுட்டிக்காட்டினார் சுமந்திரன் எம்.பி.

இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையையாவது இந்தச் சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னர் நீங்கள் செய்திருக்க முடியும். தவறிவிட்டீர்கள். குறைந்தபட்சம் அதில் சிரத்தை எடுத்து வெசாக் தினத்தையொட்டியாவது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். அன்று வாக்குறுதி தந்த ஏனைய விடயங்களையும் நிறைவு செய்யுங்கள் என்றார் சுமந்திரன் எம்.பி.

நிச்சயமாக இவற்றை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டி அரசியல் கைதிகள் விடயம் உட்பட ஏனைய விடயங்களில் உடனடி நடவடிக்கைகளுக்குத் தாம் ஏற்பாடு செய்வார் என்றார் பிரதமர்.

தொடர்ந்தும் சுமந்திரன் எம்.பியுடன் கலந்தாலோசனைப் பேச்சுகளை நடத்துவதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ஒழிக்கும் ஏற்பாட்டுக்கு ஆட்சித் தலைமைப்பீடம் இணங்குமானால் சுமந்திரன் எம்.பியின் கலந்தாலோசனை தொடர்ந்து பெறப்படும் எனத் தெரிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...