நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
NSACP இந்த தரவு அறிக்கைகளின்படி, 2920 நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், 2284 நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், 1289 நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும், 692 நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் 2847 நோயாளிகள் பிற பாலியல் சார்ந்த நோய்த்தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு முதல் 874 எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க அல்லது குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.
மேலும், இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.