அனைத்து களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலையை 20 சதவீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சிறுபோகத்தில் களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலைகளை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
உலக சந்தையில் களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் லை குறைப்பு, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமை மற்றும் இறக்குமதித் தேவைகளுக்காக அரசாங்கம் டொலர்களை விடுவித்தமையினால் விலைகளை குறைக்க முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தரமற்ற பூச்சிகொல்லிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறும், பூச்சிகொல்லி சட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய தண்டனைகளை அதிகரிப்பதற்கான திருத்தங்களை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிகொல்லி பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
நாட்டுக்குள் கடத்தப்படும் பூச்சிகொல்லிகள் மீதான சோதனைகளை விரைவுபடுத்தவும், அதற்கு கடற்படையின் ஆதரவைப் பெறவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment