9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், அடுத்து சபை எப்போது கூடும் என்ற திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த திகதி ஒரு மாதத்தை விஞ்சுதலாகாது.
அந்தவகையில் 48 மணிநேரமே நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படலாம் என தெரியவருகின்றது.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அண்மையில் அனுமதி கோரியிருந்தார். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார்.
அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் குழுக்கள் செயலிழக்கும். புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அவசரகால சட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீடித்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற ஒப்புதலை பெறும் நோக்கிலேயே இன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறுகின்றது.
அவசரகால சட்டத்தை பிரதான எதிர்க்கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் எதிர்த்தாலும், அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாக்குகள் அரச வசம் இருப்பதாக தெரியவருகின்றது.
ஆர்.சனத்
#SriLankaNews
Leave a comment