இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம்.
அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின்கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொங்கல் விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் பங்குபற்றலுடன் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேகூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமதுரையின்போது குறிப்பிட்டார்.
ஆகவே, எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியத் தாயுடன் பேசுவதற்கும், சண்டையிடுவதற்கும், தொல்லைக்கொடுப்பதற்கும் எமக்கு உரிமை இருக்கின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் வந்திருந்தபோது 10 ஆயிரம் வீடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அவருடன் பேச்சு நடத்தி நாமே அதனை பெற்றோம். தற்போது 4 ஆயிரம் வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது.
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் ஆரம்பமாகும். இனி நல்லாட்சி அல்ல, விரைவில் வல்லாட்சி அதாவது வல்லவர்கள் ஆளக்கூடிய ஆட்சி உருவாகும். பொங்கலுக்கு முன்னர் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். பழையவை எரிக்கப்படும். நாமும் இந்நாட்டிலுள்ள சில பழைய விடயங்களை எரிக்க வேண்டியுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்கால ஜனாதிபதியுமான சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்கு நில உரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். வருங்கால ஜனாதிபதியிடம் அந்த உறுதிமொழியை பெற்றுள்ளோம்.” – என்றார்.
#SrilankaNews
Leave a comment