யாழ் .பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும்! – மாணவர்கள் கோரிக்கை
கலாசார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கடந்த வருடங்களில் யாழ். பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்த குறித்த சிறப்புக் கற்கை நெறி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின்போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
குறித்த கற்கைநெறியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு போதிய விரிவுரையாளர்கள் இல்லை எனவும், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழவின் அனுமதி இல்லை எனவும் நிர்வாகத்தால் கூறப்படுகின்ற காரணங்களை ஏற்க முடியாது.
குறிப்பாக மூன்று நிரந்தர விரிவுரையாளர்களும் வருகைதரு விரிவுரையாளர்களும் தற்போது உள்ளனர் எனமாணவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பேராசிரியர் புஸ்பரத்னம்,
புதிதாக பாடநெறிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றிருக்க வேண்டியதில்லை. குறித்த அனுமதிக்கான படிமுறைகளை முன்னகர்த்துவதன் மூலம் காலப்போக்கில் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் – எனது தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவர்களின் விருப்பங்களை புரிந்துகொள்ளமுடிகிறது. சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராயப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment