“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ராஜபக்ச குடும்பம் அதிகார போதையில் மயங்கியுள்ளது. மஹிந்த உள்ளிட்ட குழுவினரே வன்முறைக்கு வழிவகுத்தனர். ஆதரவாளர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்பதை மஹிந்த ராஜபக்ச தமதுரையில் தெளிவுபடுத்தவில்லை. மோதத் தயார் என்ற தகவலையே அவர் வழங்கினார். எனவே, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்ச பொறுப்பை ஏற்கவேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்களை ஆளுங்கட்சியினரே வன்முறையாக மாற்றினர்.
சில ஆயுதங்கள் வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் அலரிமாளிகையில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாகும். வன்முறையாளர்கள் காலிமுகத்திடல் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை. போராட்டக்காரர்களை நோக்கியே கண்ணீர்புகைகூட வீசப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.
ஜனாதிபதியால் நாட்டை ஆளமுடியாது. அவரை வைத்துக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதிலும் பயன் இல்லை. எனவே, அவரும் பதவி விலக வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” -என்றார்.
#SriLankaNews
Leave a comment