மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 72 வயதுடைய மூதாட்டி ஒருவரும், இன்று அதிகாலை தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுக்கொண்ட 78 வயதுடைய மூதாட்டி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இதேவேளை இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுன. எனவே சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, நானாட்டான் டிலாசார் பாடசாலை, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment