பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு மின்சார சபைக்கு விடுவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து மின்சார சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்று இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார சபைக்கான மின்சார விநியோகத்தை எவ்வித வெட்டுக்கள் இன்றியும் பேண முடியும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு நிலை இருப்பின் தமக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாளை (25) முதல் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒன்றரை மணிநேரமும் மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இந்நிலைமையை தடுக்கும் வகையில் மின்சார முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews