மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 மில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும்.
நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டவரைபு தொடர்பில்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இந்த சட்டவரைபை இன்றைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும். அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும்.
கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள மிகப்பெரும் நிறுவனங்கள் முன்வரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன என சுட்டிக்காட்டினார்.
Leave a comment