இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியப் பிரஜைகள் நேற்று (ஏப்ரல் 14) இரவு ஈரானுக்குப் புறப்பட்டதாக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைக் கடற்கரைக்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ஐரிஸ் தேனா (IRIS Dena) மற்றும் ஐரிஸ் புஷேர் (IRIS Bushehr) ஆகிய கப்பல்களில் இருந்தவர்களே இவ்வாறு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கடலில் தத்தளித்த இவர்களை இலங்கை கடற்படையினர் துரிதமாகச் செயற்பட்டு மீட்டு, கரைக்கு அழைத்து வந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருந்தனர்.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஈரானிய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இவர்களைத் பாதுகாப்பாகத் தாயகம் திருப்பி அனுப்புவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கமைய, நேற்று இரவு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விசேட விமானம் மூலம் அவர்கள் அனைவரும் ஈரான் நோக்கிப் பயணித்தனர்.
பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட ஈரானியக் கடற்படையினருக்கு இலங்கை வழங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஈரானிய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இந்த மீட்பு மற்றும் நாடு திரும்பும் நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.