இந்தியா
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘சீல்’

ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகமாக காணப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல், தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. அதன் பின் அங்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில மணி நேரம் அதிமுக தலைமை அலுவலகத்திலேயே இருந்து அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சற்று நேரத்திற்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இதனிடையே, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் கலவரமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#IndiaNews
You must be logged in to post a comment Login