தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியமை என்ஐஏ விசாரணையில் அம்பலமான நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேரி பிரான்சிஸ்கோ என்ற குறித்த பெண் சென்னையில் இருந்து அண்மையில் விமானம் மூலம் மும்பைக்கு செல்ல இருந்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனடா நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர் என்றும், கடந்த 2018 ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இலங்கையில் இருந்து சென்னை வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக அண்ணா நகரில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
தனது வாடகை ஒப்பந்த பத்திரம் மூலம் கேஸ் இணைப்பு மற்றும் வங்கி கணக்கை தொடங்கிய குறித்த பெண், இடைத்தரகர்கள் மூலம் பான் கார்ட், ஆதார் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்தியக் கடவுச்சீட்டு ஆகியவற்றையும் பெற்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கைப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், கனடா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்த மேரி பிரான்சிஸ்கோ, இந்திய வங்கிகளில் செயலற்று இருக்கும் கணக்குகளில் உள்ள நிதியை போலி ஆவணங்கள் மூலம் எடுத்து அவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயலற்று இருக்கும் ஒரு கணக்கில் இருந்து பெரும்தொகையை எடுப்பதற்காக திட்டமிட்டிருந்த மேரி பிரான்சிஸ்கோ , மும்பை செல்ல காத்திருந்த போது, தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த இலங்கைப் பெண்ணான, மேரி பிரான்சிஸ்கோ தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment