Connect with us

செய்திகள்

முதலையின் வாயின் முன்னால் உள்ள இரையாக நாம்!! – நீதியரசர் விக்னேஸ்வரன்

Published

on

vikneshwaran

“இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வு அல்ல என்ற யதார்த்தத்தை இந்தியா கூட உணர்ந்துள்ளதாகவே நான் காண்கின்றேன்” இவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஏனைய கட்சிகளை தவிர்த்து தமிழரசு கட்சி சார்பில் மூன்று பேரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் நியமித்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன? அண்மையில் பல தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரியதற்கும் தமிழரசு கட்சியின் அமெரிக்க விஜயத்துக்கும் ஏதாவது தொடர்பு அல்லது முரண்பாடு இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கேள்விக்கு நான் மிகவும் சுருக்கமான பதிலையே அளிக்க விரும்புகின்றேன். அதற்கு முன்னர் இவை பற்றிய பின்னணியை ஆராய்ந்தால் சாலச் சிறந்தது என்று கருதுகின்றேன். அண்மையில் தமிழ் கட்சிகள் பல யாழ்ப்பாணத்தில் கூடி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை கோருவதற்கு மேற்கொண்ட முடிவு எந்த விதத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையிலானது என்று கொள்ளக்கூடாது.

13 ஆவது திருத்த சட்டம் 1987 ஆம் ஆண்டு இந்திய தலையீடு காரணமாக இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிகார பரவலாக்கமே அன்றி அதிகார பகிர்வு அல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வாக நாங்கள் கோருவருவது மத்தியில் இருந்து (மீளப்பெறமுடியாதவாறு) அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி கட்டமைப்பையே ஆகும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தற்போது எமது அரசியல் யாப்பின் ஒரு அங்கம். சட்ட ரீதியாக அரசியல் யாப்பின் ஒரு அங்கமான இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய முழுமையான அதிகாரத்தை எமக்கு தருமாறு இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் வலியுறுத்தும் உரிமை எமக்கு இருக்கின்றது.

இந்தச் சட்டத் திருத்தத்தின் கீழ் எமக்கிருக்கும் முழுமையான அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் தார்மீகக் கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கின்றது. 13 ஆவது திருத்த சட்டம் 1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அன்றே இது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அல்ல என்று திட்டவட்டமாக தமிழ் அரசியல் தலைமைகளினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் செய்து வந்துள்ளோம்.

நான் முதலமைச்சராகப் பதவி வகித்ததும் பலவீனப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ்த் தான். நான் முதலமைச்சராக பதவி வகித்தபோதே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் பொலிஸ் அதிகாரம் உட்பட எல்லா அதிகாரங்களையும் எமக்கு வழங்குமாறும் நான் வலியுறுத்திவந்தேன். ஏனென்றால், சட்ட ரீதியாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வது எமது உரித்து.

அதேவேளை, இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் எமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். கௌரவ நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூட்டுறவு சமஷ்டியின் அவசியம் பற்றி வலியுறுத்தி இருந்தார். ஆகவே, இந்தியா கூட இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வு அல்ல என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளதாகவே நான் காண்கின்றேன்.

இன்று எம் மீது பாரிய ஒரு இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற அரசாங்கத்தின் திட்டம் தமிழப்; பேசும் மக்கள் மீதான மற்றொரு முள்ளிவாய்க்கால் அன்றி வேறு எதுவும் இல்லை. இதுவே உண்மை. இதனை நாம் வெற்றிகரமாக முறியடிக்க வேண்டிய போர்க்களத்தில் நிற்கின்றோம். எமது கண்களுக்கு முன்பாக ஏற்கனவே நாளாந்தம் பல ஏக்கர் காணிகளை நாம் இழந்துவருகின்றோம். இந்த ஆபத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள கையில் இருக்கும் எந்த ஒரு துரும்பையும் எமது தற்பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

கையில் இருக்கும் எந்த ஒரு தற்காப்புக் கருவியையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் ஒரு நிலைமையை நாம் ஏற்படுத்தி விடக் கூடாது. ஒரு புறம் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற சட்ட மறுசீரமைப்பின் ஊடாக நாம் ஒரு தேசம் என்று எம்மை கூறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ரீதியான, வரலாற்று ரீதியான, கலாசாரரீதியான, பாரம்பரிய ரீதியான எமது அடிப்படைகளை நிர்மூலம் செய்யும் கைங்கரியங்கள் அரங்கேறிவரும் வேளை, மறுபுறத்தில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக 13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக எமக்கு கிடைக்கும் சில அதிகாரங்களையும் இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் நடைபெறுகின்றது.

அதேவேளை, வடக்கு -கிழக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமான இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் முதலையின் வாயின் முன்னால் உள்ள இரையாக நாம் வாழ்கின்றோம். ஒவ்வொரு 6 தமிழ் மக்களுக்கும் 1 இராணுவ வீரன் என்ற அளவில் வடக்கு-கிழக்கின் இராணுவமயமாக்கல் இருக்கின்றது. முல்லைத்தீவில் இந்த நிலைமை 2 பொது மக்களுக்கு 1 இராணுவ வீரன் என்ற விகிதத்தில் மோசமாக இருக்கின்றது.

எமது கண்களுக்கு புலப்படாமல் எமது அடர்ந்த காடுகளுக்குள் பாரிய இராணுவ குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. எமது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகின்றது. இவை எல்லாம், எமது பாரம்பரிய வாழ்விடங்கள், கலாசாரம், வாழ்வு, அடையாளம் ஆகிய எல்லாவற்றையுமே இல்லாமல்செய்யும் இனஅழிப்பு நடவடிக்கையே அன்றி வேறு எதுவும் இல்லை.

இந்த இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு “பாதுகாப்பதற்கான பொறுப்பு” (Responsibility to Protect/R2P ) என்ற ஐக்கிய நாடுகள் கோட்பாட்டை பிரயோகம் செய்ய வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது. எந்த ஒரு இடத்திலும் இனப்படுகொலை அல்லது இன சுத்திகரிப்பு நடைபெறும் அல்லது நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் இருக்கும்பொழுது அவற்றில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாக்கும் சர்வதேச சமுகத்தின் பொறுப்பை R2P கோட்பாட்டின் முதலாவது பொறுப்பான “Responsibility to Protect/R2P ” வலியுறுத்துகின்றது.

வடக்கு கிழக்கில் நிலைமைகள் எதனையும் நான் மிகைப்படுத்தி கூறி, எம்மை இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச சமுகத்தின் “சுநளிழளெiடிடைவைல வழ Pசநஎநவெ” பொறுப்பை நான் வலியுறுத்தவில்லை. இதுதான் யதார்த்தம். நிலைமைகள் நாளுக்கு நாள் இங்கு மோசமடைந்து வருகின்றன.

இந்த ‘Responsibility to Protect’ தலையீட்டை தலைமை ஏற்று முன்னெடுக்கும் எல்லா தகுதிகளும் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், இந்திய- இலங்கை ஒப்பந்த ரீதியாகவும் இருக்கின்றது. ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்தியா முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு தலையீட்டாளர் (Effective and legitimate intervener) ஆகும்.

இன்று பாரிய இனஅழிப்பு ஒன்று கட்டவிழ்த்து விடப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்படுகின்றன. காணிகள் பறிபோகின்றன, வாழ்வாதாரங்கள் பறி போகின்றன, எமது வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் துரிதமாகத் தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன. போரின் பின்னர் படையினர் தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கான ஏக்கர்களில் குடிகொண்டு வருகின்றார்கள்.

மீனவர் விவசாயிகள் சிறுகைத் தொழிலாளர்கள் பாடு வருந்தத்தக்கதாய் இருந்து வருகின்றது. நாம் ஆபத்தில் இருக்கின்றோம் ஆகவே கால தாமதம் இன்றி எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்தியா இது தொடர்பில் காத்திரமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது விருப்பம்.

அதேவேளை, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு நாம் கூட்டாகக் கோருவது அதனை நாம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் என்று வெளிநாடுகளில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் பலர் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

நீர்த்துபோகச்செய்யப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இருந்தும் எமது வடக்கு – கிழக்கு தாயகத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாம் பறிகொடுத்துள்ளதும் பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் உண்மை. அதேபோல, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் பயன்படுத்தி பறிக்கப்பட்ட சில நிலங்களை நாம் மீட்டுள்ளதும், அபகரிக்கப்படவிருந்த பல ஆயிரம் ஏக்கர் காணிகளை பாதுகாக்க முடிந்துள்ளதும் சிறிய அளவிலேனும் எமது மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் செய்ய முடிந்துள்ளதும் உண்மை என்பதை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, அரைகுறை என்றாலும், நாம் எமது கைகளில் தற்போது இருக்கும் அதிகாரத்தை இழந்து விடாத வகையில் செயற்படவேண்டும், அதேவேளை, எமக்கு கிடைக்கவேண்டிய முழுமையான அதிகாரத்தையும் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆகவேதான், ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியாவைக் கேட்க விழைகின்றோம். கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது கருத்தாக இருக்கின்றது.

நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு நாம் இந்தியாவைக் கோருவதை நாம் எமது சுயநிர்ணய உரிமையினைக் கைவிட்டு, சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டு 13 ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்தக்கூடாது. 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே எமது சட்ட ஏடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான ஏற்பாடுகள். எமது நிரந்தரத் தீர்வு வேறு திசை நோக்கிச் சென்று பெற வேண்டிய ஒன்று.

நான் முன்னர் குறிப்பிட்டபடி, 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் 13 ஆவது திருத்தம் இலங்கை அரசியல் அமைப்பில் இருக்கின்றது. இருக்கும் போது எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் 2009 ஆம் ஆண்டுவரை ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அரசியல் ரீதியாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, இன அழிப்புக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் தமிழ் மக்களின் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் இன அழிப்புக்கான நீதியை பெறுவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்.
எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு உத்தியாக எமது கைகளில் இருக்கும் சட்ட ரீதியான 13 ஆவது திருத்தத்தை எவ்வாறு சாதுரியமாகப் பயன்படுத்தலாம் என்பதே நடைபெற்ற கலந்துரையாடல்களின் சிந்தனை ஆகும்.

வட – கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல்களை முடிந்தளவுக்கு எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் தேர்தல்களை தட்டிக்கழித்து தனது சிங்கள- பௌத்த இனம் சார்ந்த தேசிய கொள்கைகள் , சட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை சில கைக்கூலி தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தி மத்திய அரசாங்கம் அமுல்படுத்துவதை தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும், வேலை இல்லாமல் இருக்கும் எமது மக்களை தவிர்த்து சிங்கள மக்களுக்கு எமது பிரசதேசங்களில் வழங்குவதை தடுப்பதற்கும், திட்டமிட்டு மேகொள்ளப்பட்டுவரும் சமூக விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றில் இருந்து எமது இளைய சமுகத்தை காப்பாற்றுவதற்கும், ஓரளவுக்கேனும் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும், வீழ்ச்சியடைந்த எமது கல்வியை முடிந்தளவுக்கு மீள கட்டியெழுப்புவதற்கும், போரினாலும் மற்றும் கொரோனாவினாலும் நலிவடைந்து நிற்கும் எமது மக்களின் வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்கு எம்மாலான சில திட்டங்களை செயற்படுத்துவதற்கும், சட்டத்தில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்தியாவின் கடப்பாட்டையும் பொறுப்பையும் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை, இந்த அதிகாரங்களை வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியின் இடையூறு எதுவும் இன்றி அர்த்தம் உள்ள வகையில் பிரயோகிக்கமுடியும் வகையிலான உரிய உத்தரவாத ஏற்பாடு ஒன்றையும் இந்தியா ஏற்படுத்தி தருவதுடன், ஒற்றை ஆட்சிக்கு உட்படாத ஒரு சமஷ்டி அடிப்படையிலான நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்துடன் தமிழர் தரப்பு பேச்சுவார்தைகளிலும் இராஜதந்திர செயற்பாடுகளிலும் ஈடுபடுவது அவசியம். சர்வதேச ரீதியான மத்தியஸ்தம் இல்லாமல் எமது பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண முடியாது. அந்த அடிப்படையில், அமெரிக்காவுடன் பேசுவதற்கு தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. இதில் எனக்கு எந்தவிதமான காழ்புணர்ச்சியோ அல்லது பொறாமையோ இல்லை.

எந்தப் பின்னணியில் எவர் பேச்சுக்குச் சென்றாலும் எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான நிலைப்பாடுகளை அவர்கள் செல்லும் இடங்களில் தெளிவாக வலியுறுத்தும்வரையில் எனது ஆதரவு அவர்களுக்கு இருக்கும். அவர்கள் அவ்வாறு வலியுறுத்;துவதால் முரண்பாடுகள் எதுவும் ஏற்படப் போவதில்லை.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றாது. ஏற்கனவே ஒற்றை ஆட்சியின் கீழான 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது. ஆகவே, ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் இதேமாதிரியான நிலைமையையே மேலும் ஏற்படுத்தும்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். இதனையே, அமெரிக்கா செல்லும் தமிழரசுக் கட்சியின் குழு வலியுறுத்த வேண்டும். இதனை நான் ஏற்கனவே இந்த குழுவில் அங்கம்வகிக்கும் எனது நண்பர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோல, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை ஆகியவை தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதுடன் ஆட்சி மாற்றங்களுக்கான கருவிகளாக தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்காமல் செயற்படவேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு. – என்றுள்ளார்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...