ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 2ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர், மறுநாள் காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், திருகோணமலைக்கும் விஜயம் செய்து எண்ணெய்க் குதங்களையும் பார்வையிட்டிருந்தார்.
தொடர்ந்து அன்றைய தினமே யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் பல தரப்பினரையும் சந்தித்திருந்ததுடன், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களையும் பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
இதேவேளை, நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரையும், இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துப் பேசியிருந்தார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில் இன்று, இந்திய வெளிவிவகாரச் செயலருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.