இலங்கைக்கான சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இது முன்கூட்டியே திட்டமிட்டப்பயணம் எனவும், உதவிகளை வழங்கவே தூதுவர் அங்கு சென்றாரென கொழும்பிலுள்ள சீனத் தூதுரகம் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், இதன் பின்னணியில் மேலும் சில வியூகங்கள் இருக்கக்கூடும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
யாழுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகள் நல்லூர் கோவிலுக்குச்சென்று வழிபடுவது வழமை.
ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பளித்து – வேட்டி அணிந்து – அதுவும் ஆலய விதிமுறைகளை ஏற்று, மேற் சட்டையைக்கூட கழற்றி சீனத் தூதுவர் அங்கு சென்று வழிபட்டமை பலரினதும் பாராட்டை பெற்றுள்ளது. நாமும் வாழ்த்தி வரவேற்போம்.
இலங்கையில் தெற்கு பகுதியிலேயே சீனா பெருமளவு முதலீடுகளை செய்து, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தியாவே காலூன்றியுள்ளது. ரயில் பாதை முதல் பலாலி விமான நிலையம்வரை பெரும்பாலான திட்டங்கள் டில்லி வசமே உள்ளன.
குறிப்பாக வடக்கில் மூன்று தீவுகளில் சீனா மேற்கொள்ளவிருந்த முதலீடுகள்கூட இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. அந்தளவுக்கு வடக்கில் இந்தியா செல்வாக்கு செலுத்துகின்றது.
இந்நிலையில் வடபகுதியில் உள்ள தமக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும், தகவல்களை திரட்டவும் மேலும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டுமே சீனத் தூதுவர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
சிலவேளை முன்கூட்டியே தகவல்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதும் பயணத்தின் நோக்கமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் சீனத் தூதுவரின் வடக்கு பயணம் எல்லா விதத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதே உண்மை.
யாழ்ப்பாண மக்களுக்கான சீனாவின் உதவிகள் தொடரும் என சீனத் தூதுவர் அறிவித்துள்ளார்.
சர்வதேச தளத்தில் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக சீனா முன்னிற்பதில்லை. ஜெனிவாத் தொடர் உட்பட சர்வதேச விவகாரங்களில்போது இலங்கை அரசு பக்கமே நின்றுள்ளது.
ஆக ‘சீனாவின்’ உதவி என்பது அபிவிருத்தி சார்ந்தமாக இருக்குமேதவிர, தமிழர்களின் உரிமை சார்ந்ததாக இருக்காது என்பதையும் புரிந்து கொள்வோம்.
#SriLankaNews