பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு நாம் நம்மை இசைவாக்கிக்கொண்டுவிட்டால் காலம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்து கொண்டிருக்கின்றோம்.
இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில் அண்மையில் வெவ்வேறு காரணங்களால் பல பாடசாலை மாணவ மாணவியர் மரணித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. குறித்த மரணங்கள் தொடர்பில் நேரடியாகவும், சட்ட ரீதியாகவும்இ சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த போதும், இம் மரணங்களின் எண்ணிக்கை நீந்திக்கொண்டே போகின்றமை பெரும் துயரமாகும்.
குறிப்பாக இன்று (23.11.2021) காலை பாடசாலை செல்வதற்காக சென்ற மாணவ மாணவியரில் பலர் திருகோணாமைலையில் இழுவைப் படகு கல்விழுந்து விபத்துக்குள்ளாகி மரணித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துள்ளாக்கியுள்ளது.
குறித்த கோரச் சம்பவத்தில் சகு சஹீ (மூன்றரை வயது),சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோர் உள்ளிட்டவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் எத்தனை பேரை எத்தனை விபத்துகளில் காவு கொடுக்க போகிறோம் என்ற கேள்வியை மனசாட்ச்சியுள்ள அனைவரும் தத்தமக்குள்ளே கேட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகும் சமபவங்கள் இவை மட்டுமா? என்றால் இல்லை இதே நாளில் மற்றுமொரு விபத்து இன்று யாழில் சம்பவித்துள்ள நிலையில் மற்றுமொரு பாடசாலை மாணவி காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம்- தாவடி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி உட்பட இருவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
அது தவிர அண்மையில் கிளிநொச்சியில் மஞ்சள் கடவையில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மற்றும் மேலும் இரு வாகனங்களினால் விபத்துக்குள்ளான மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.
உண்மையிலேயே இவ்வாறான விபத்துக்கள் எவ்வகையான காரணங்களால் நிகழ்கின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் சம்பத்தப்பட்ட தரப்புகளால் சொல்லப்படுகின்ற போதிலும், உண்மையிலேயே இவ்வாறான விபத்துகள் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் ஆகியவற்றினால்தான் நிகழ்ந்தேறுகின்றன.
மேற்சொல்லப்பட்ட மூன்று கோர விபத்துகளிலும் பாதிக்கப்பட்ட அல்லது பலியான மாணவ மாணவியர்கள் தமது கல்வி விருத்தியில் கவனம் செலுத்தியதை தவிர உண்மையிலேயே செய்த தவறுகள் எவை?
யாரோ ஒருவர் அல்லது யாரோ ஒரு தரப்பு செய்கின்ற தவறுகளுக்கு விறகுவெட்டி படிக்க வைத்து உயர்தர அனுமதிக்காக அனுப்பிவிட்டு காத்திருந்த தந்தையும் கட்டு சோறு, தண்ணீர் போத்தல்களை தயார் செய்து முத்தமிட்டு தமது மகன்களையும் மகள்களையும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த பெற்றோரும் ஏன் தமது குருத்துக்களை இழந்து கண்ணீர் சொரிய வேண்டும்?
உண்மையிலே இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்பட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து, குறிப்பாக பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். எங்கள் தாய் நிலத்தின் எதிர்கால சந்ததிகள் காப்பாற்றப்பட வேண்டும்.
மீண்டும் மீண்டும் நிகழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான விபத்துகளுக்கு கூடிய விரைவிலேயே முற்றுப்புள்ளியிட வேண்டும்.
#SriLankaNews
Leave a comment