இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் – இதே நாளில் ஒட்டு மொத்த உலகமுமே நிலைகுலைந்து நின்றது. மனித குலத்தை நேசிப்போரால் இந்த நாளை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. இந்நாள் தந்த வலியோ பலரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. அதனால் இன்றளவிலும் தவித்துக்கொண்டிருப்போர் பலர்….
ஆம். ‘சுனாமி’ என்ற ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தால் பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார்வரை லட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்.
அவர்களை இழந்த சோகத்தில் – உளரீதியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களும் உள்ளனர். மேலும் பலர் உறவுகளின் நினைவுகளோடு ‘வலி சுமந்த ‘ வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சுனாமிப் பேரலைத் தாக்கத்தினால் இலங்கை, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, சோமாலியா உட்பட மொத்தம் 14 நாடுகள் தமது நாட்டு உயிர்களையும், பொருளாதாரத்தையும் இழந்து அவல நிலைக்குள்ளாகின.
ஆழிப்பேரலையில் அள்ளுண்டுச்சென்று 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தோனேசியாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகின. அடுத்தாக இலங்கை.
சுமத்ரா தீவில் காலை 6.58 மணிக்கு ஏற்பட்ட பேரலை, இலங்கையை காலை 9.25 தாக்க ஆரம்பித்தது. சுமத்ரா தீவிலிருந்து இலங்கை சுமார் 3,600 கிமீ. மணிக்கு ஆயிரத்து 600 கிலோ மீற்றர் வேகரத்தில் ராட்சத அலை வந்துள்ளது.
இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 332 பேர்வரை பலியாகினர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் கரையோரப்பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் இடம்பெற்றன.
அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன. நாய்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் என லட்சக்கணக்கான உயிரினங்களையும் உயிரையும் ஆழிப்பேரலை குடித்து – ஊழித்தாண்டவமாடியது.
சுனாமி தந்த வலிகளை வெறும் வார்த்தகைளால் மட்டும் விவரித்துவிடமுடியாது. பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் ஏராளம்.
இலங்கையில் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற காலப்பகுதி அது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுனாமியும் அங்கு வாழும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உயிர் பலி ஒருபுறம், பொருளாதார இழப்புகள் மறுபுறம் என வலிகள் தொடர்ந்தன. மீனவ சமூதாயத்துக்கு மீள முடியாதநிலைமை ஏற்பட்டது.
காலம் காற்றாக பறந்தது. மனித நேயம்மிக்க நாடுகளும், மனித நேயம்மிக்கவர்களும் உதவிகளை வழங்கினர்.
இதனால் படிப்படியாக பொருளாதார இழப்புகளை சரிசெய்ய முடிந்தது. ஆனால் உறவுகள் மீள வரவேயில்லை. அந்த வலி மட்டும் பலரை இன்னும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் தென்கில் பாதிக்கப்பட்ட பல கரையோரப் பகுதிகளில் சில கிராமங்களில் அபிவிருத்திகள் உரிய வகையில் இடம்பெறவில்லை. மக்களின் வாழ்வை சூழ்ந்த இருள் இன்னும் அகலவில்லை. அடுத்த வருடத்திலாவது இந்நிலைமை மாறவேண்டும்.
ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோம்.
#tsunami
Leave a comment