தேர்தலை தள்ளிப்போடுவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் எமது நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தலை தள்ளி போடுவதால் உலக நாடுகள் மத்தியில் மேலும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“கடந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டையும், நாட்டு மக்களை பற்றியும் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இனங்களுக்கிடையில் பிளவுகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தினார்கள்.
அதன் விளைவுதான் எமது நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் எப்படி வாழ்வது என்று தெரியாமல் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், யுவதிகள், பெண்கள் என பலர் தொழில் தேடி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். கடன் சுமையை மக்கள் மீது ஒருபோதும் திணிக்க முடியாது. இதற்கு மாற்று வழிகளை அரசாங்கம் கையாள வேண்டும்.
எங்கு பார்த்தாலும் தேர்தல் பற்றியே பேசப்படுகிறது. ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்று எல்லோர் மத்தியிலும் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யாருக்கும் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது.
தேர்தலை தள்ளிப்போடுவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எமது நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தலை தள்ளி போடுவதால் உலக நாடுகள் மத்தியில் மேலும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதற்கு இடமளிக்காமல் குறித்த திகதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்பதே நாட்டில் வாழும் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்” என்றார்.
#SriLankaNews
Leave a comment