யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து 3 பேர் பல்கலைக்கழக நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொரோனா பி.சி.ஆர். ஆய்வுகூடத்தில் பணியாற்றிய 4 மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதால்
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக பல்கலைக்கழக நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்க துணைவேந்தர் பணித்திருந்தார்.
இதற்கமைவாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே விரைவாக பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment