பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சட்டமூலம் வெகுவிரைவில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு சந்தேக நபரை தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் பாதுகாப்பாக இருக்கின்றாரா? என்பதை உறுதி செய்வதற்காக மாஜிஸ்திரேட் நீதவான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வருகை தரவும் புதிய திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சட்டத்தரணி ஒருவருக்கு வருகை தரவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தமது உறவினர்களுடன் பேசுவதற்கும் புதிய திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment