மத்திய கிழக்கில் நேற்றைய தினம் இரவு திடீரென பதற்றம் அதிகரித்ததமையால் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று மாலை 5:10 மணிக்கு பஹாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டதுடன், விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.
விமானங்கள் மத்திய கிழக்கை நெருங்கியபோது, ஈரானால் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தபட்டதாக கூறப்படுகிறது. அதனால் தொடர்ந்து, குவைத்தும் சவூதி அரேபியாவும் தத்தமது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடின.
இந்நிலையில் உரிய இடங்களுக்கு உடனடியாக செல்ல முடியாத காரணத்தினால், அந்த இரண்டு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்வெளிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், மற்றும் பல சர்வதேச விமானங்களும் வானில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த விமானங்கள் இரண்டும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.