‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை எடுத்துள்ள தீர்மானம் பொதுமக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் எனப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், டித்வா சூறாவளியால் மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர் இழப்பீடுகள் உட்பட 07 பில்லியன் ரூபாயை ஈடுசெய்ய நுகர்வோர் மீது சுமையை ஏற்ற முற்படுகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் மின்சார சபை 147 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளது. அத்தகைய நிலையில், ஒரு இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பை ஏழை மக்களிடம் வசூலிப்பது “மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்ற” செயலாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப் ஒரு நிவாரண நிறுவனம் அல்ல, அது 6.5% வட்டி வசூலிக்கும் ஒரு வணிக நிறுவனம் என அவர் விமர்சித்தார்.
நாட்டில் இன்னும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து, உணவின்றித் தவிக்கும் நிலையில் இந்தக் கட்டண உயர்வு நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.
“பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பத் தவறினால், அரசாங்கம் நிச்சயமாகக் கட்டணத்தை அதிகரிக்கும். மின்சாரப் பிரச்சினையை அரசியலாக்காமல் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.” – ஜனக ரத்நாயக்க.
கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் வறிய குடும்பங்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாவார்கள் எனவும், பல பகுதிகளில் மின்சார விநியோகத் துண்டிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்தார்.