ஏனையவை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பிடிக்கவுள்ள பல ஆச்சரியங்கள்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பிடிக்கவுள்ள பல ஆச்சரியங்கள்
2024இற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
EPF வைத்திருப்பவர்களை அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படும் அதேவேளை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் செயற்படுகின்றது. அத்துடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை சில தரப்பினர் தடம்புரளச் செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கத் தவறினால் பெரும் நெருக்கடிகள் ஏற்படும். எனவே, தேவையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சிகள் உட்பட நாடாளுமன்றத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
இதன்படி, முதற்கட்டமாக உத்தேச உள்நாட்டு வருமான (திருத்த) சட்டமூலத்தை நாடாளுமன்றம் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் வகையில் பல ஆச்சரியங்கள் உள்ளடக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.