30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்
பொதுவாக, மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் சில சமயங்களில் விசா தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால், இனி அப்படி இருக்காது என்று கூறியுள்ளார் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்.
அதற்கான காரணம், 2030ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தனது உயர்கல்வி நிறுவனங்களில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதுதான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Thierry Mathou.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐந்தாண்டு குறுகிய கால ஷெங்கன் விசா தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த Mathou, ஒரு இந்திய மாணவர் பிரான்சில் ஒரு செமஸ்டர் செலவழித்தால் கூட, அது வளர்க்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்பட வேண்டிய ஒரு தொடர்பை உருவாக்குகிறது என்று பிரான்ஸ் நம்புகிறது என்றார்.
இந்த கோடையில் இருந்து, முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள், பிரான்சில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படித்தால் கூட, அவர்கள் 5 ஆண்டு குறுகிய கால ஷெங்கன் விசாவிற்கு தகுதி பெறுவார்கள்.
இது இந்திய முன்னாள் மாணவர்கள், பிரான்ஸ் மற்றும் அவர்களது பிரெஞ்சு சகாக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதற்காக அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.