பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த மின்னல் வேக தாக்குதல் நடத்தப்பட்டது.
வெறும் 25 நிமிடங்களில் 24 அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த துல்லியமான தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்துர்”(Operation Sindoor) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி தாக்குதல் நேற்று அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நடைபெற்றது.
புது டெல்லியில் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர்.
ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு “நிதானமான ஆனால் அதே நேரத்தில் தகுந்த பதிலடியாக” இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு நேபாளி நாட்டவர் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கை இந்திய ராணுவத்தின் போர் வியூகத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எங்களது துல்லியமான உளவுத்துறை தகவல்கள் எச்சரித்தன.
ஆகையால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கவும், முறியடிக்கவும் வேண்டியது இந்தியாவின் கட்டாயமாக இருந்தது.
இதன் காரணமாகவே இன்று அதிகாலை இந்தியா தனது பதிலடி உரிமையை மிகத் துல்லியமாக பயன்படுத்தியது.