பிரதீப்புக்கு ரெட் கார்டு.. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை.. கமலை விளாசும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டது கொஞ்சம் கூட நியாயமே இல்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 கடந்த 1ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. மற்ற சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக 5 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
பிக் பாஸ் சீசன் 7: கடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது பிக் ஹவுஸ், சுமால் ஹவுஸ் என பல மாற்றங்கள் உள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் ரசித்து பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய விஷயங்களை அமல்படுத்தியுள்ளனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரெட் கார்டு: இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிரதீப்புக்கு எதிராக சக போட்டியாளர்கள் போர்க்கொடி உரிமைக்குரல் எழுப்பினார்கள். அவர் வீட்டில் கெட்ட வார்த்தையில் பேசுகிறார். குறிப்பாக பெண்களை இரட்டை அர்த்த வசனத்தில் பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டில் இருக்கும் நல்ல சூழ்நிலை அவரால் கெட்டுப்போகிறது என அவர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதையடுத்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.
நியாயமே இல்லை: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் நெட்டிசன்கள் பலரும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறான விஷயம். ஒரே நாளில் எப்படி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தார்கள். நிக்சன், ஐஷு-விடம் வரம்பு மீறி நடந்து கொள்வது யார் கண்ணுக்கும் தப்பா தெரியவில்லையா என இணையத்தில் நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.