உலகம்

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

Published

on

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியம் கொடுத்து சீன ஆய்வுக் கப்பலான ‘சியான் 6’ இலங்கையில் நிலைநிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பலான சியான் 6 (Shi Yan 6) இலங்கையில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற இந்தியாவின் கவலைக்கு இலங்கை முக்கியத்துவம் அளிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கவலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். “சில விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா சில காலமாக தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல நட்பு நாடுகளின் கருத்தைக் கேட்டேன். சில வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். பிராந்தியத்தில் அமைதியே எங்களுக்கு முக்கியம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதத்தில் சி யான் 6 எனும் சீன ஆய்வு கப்பலை இலங்கை கடற்கரையில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version