இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் – ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது.
Leave a comment