“போராட்டங்கள் மற்றும் பேரணிகளால் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். “- என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.
எனது பதவிக்காலத்தில் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலப்பகுதியில், கொவிட் தொற்றுப் பரவலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டி ஏற்பட்டது. அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றைய எதிர்க்கட்சியினர், இந்த நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐந்து வருடகால ஆட்சியின் போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே, அவர்களுக்குப் பதிலாக என்னை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், எந்தவோர் அதிகார பலமும் இருந்திருக்காதவர்கள் போல் இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுவது கவலையளிக்கிறது.
இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளது.” – என்றார்.
#SriLankaNews
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			         
 
			        
Leave a comment