இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்கின்ற றோலர் இழுவை மடித்தொழிலை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2016 ஆம் ஆண்டு இந்திய மத்திய அமைச்சு, தமிழ் நாட்டின் மீன்பிடி அமைச்சு ஆதரவுடன் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த றோலர் இழுவை மடித்தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
இதன்போது இந்தத் தொழிலுக்கு மாற்றுத் தொழிலாக வேறு தொழிலை செய்வதற்கு மூன்று அல்லது ஆறு மாத கால அவகாசம் போதுமானது. ஆனால் இந்திய மீனவர்களோ மூன்று வருட காலம் தேவை என கோரினார்கள்.
ஆனால் இன்று ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் அந்தத் தொழில் முறையை கைவிடாதவண்ணம் தொடர்ச்சியாக அதே தொழிலைச் செய்துவருகின்றார்கள். ஏற்கனவே கலந்துரையாடி முடிவு எடுத்தது போன்று இழுவை மடித்தொழிலை முற்றுமுழுதாக கைவிட்டு மாற்றுத் தொழிலைச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
றோலர் இழுவை மடித்தொழிலால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவது எதிர்காலத்தில் கடற்றொழிலைச் செய்யமுடியாத நிலை ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருந்தும் எல்லை தாண்டி வந்து எமது கடற்பரப்பில் தொழில் செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.
கடல் வளங்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. இதனை நிறுத்தக்கோரியே நாங்கள் பல போராட்டங்களை செய்துவருகின்றோம். இந்தப் போராட்டமானது தமிழ் நாட்டுக்கு எதிரானது அல்ல.இது தமிழ் நாட்டில் றோலர் இழுவை மடிப்படகை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு எதிரானது என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். தமிழ் நாட்டு முதலமைச்சர் இந்தியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு கரிசணை காட்டுவது போல் இந்திய றோலர் இழுவை மடித் தொழிலால் பாதிக்கப்படுகின்ற வட பகுதிமீனவர்கள் தொடர்பிலும் கரிசனை காட்டவேண்டும்.
மீனவர்கள் தான் யுத்த காலத்திலும் இயற்கை அனர்த்தங்களின்போதும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள். இத்தகயை மீனவர்களை எமது உறவுகளான தமிழ் நாட்டு மீனவர்களினாலும் பாதிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.
இதேவேளை எங்களது போராட்டத்தின்போது ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் இழுவை மடித்தொழிலுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வோம் என எமக்கு ஆதரவாக கதைத்துள்ளார். ஏனைய அரசியல்வாதிகள் கலந்துகொண்டு எங்களை போராடுமாறும் உங்கள் போராட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனக்கூறி தமது அரசியலைச் செய்கின்றார்கள் .
இது போதாது என்று கடற்றொழில் அமைச்சரும் எங்கள் பேராட்டத்திற்கு வந்து சண்டித்தனமும் அடிப்பதற்கு கை ஓங்குவதுமான செயலையை செய்துவிட்டு சென்றுள்ளார். தமிழ் அமைச்சராக இருந்து கொண்டு எங்கள் போராட்டத்தின் நோக்கத்தை அறிந்துகொள்ளாது இவ்வாறாக செயற்படுவது எதற்காக?
இந்திய மீனவருடன் எமது மீனவர்கள் கடலில் பிரச்சினைப்பட்டபோது அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் எங்கள் மீனவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்க விடயம்.
மீனவர் போராட்டம் இடம் பெறும் போது அமைச்சர் சண்டித்தனத்திலும் கடற்படையினர் தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார் என்றால் இவர்களுக்குள்ள தொடர்புதான் என்ன? அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்றால் எம்மை யார் காப்பாற்றுவது – என்றார்.
#SriLankaNews
Leave a comment